இந்தியா
null

டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு அம்பலம்

Published On 2025-04-24 11:02 IST   |   Update On 2025-04-24 11:05:00 IST
  • பயங்கரவாத கும்பல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய டிஜிட்டல் தடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாத கும்பல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் இருந்தனர். மேலும் அவர்களில் சிலர் ராணுவம் போன்ற சீரூடைகளை அணிந்திருந்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய டிஜிட்டல் தடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருந்து அவர்களை இயக்கியது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற லஸ்கர் இ தொய்பா (எல்.இ.டி.) முந்தைய பெரிய தாக்குதல்களுக்கு முக்கிய மையங்களாக இருந்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து தீவிரமாக கண்காணிப்பு நடக்கிறது.

இந்திய பாதுகாப்பு படை முகாம்கள் குறித்த தகவல்கள், போலீஸ் பாதுகாப்பு ரோந்து இயக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு புதிய டிஜிட்டல் செயலி வசதியுடன் தகவல்களை வழங்கி உள்ளது.

பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள சர்வர்களை கொண்ட ரேடியோ தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.

சமீபத்தில் அதிக திறமை கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையில் அனுப்ப பாகிஸ்தானில் கூட்டுச்சதி நடந்துள்ளது. கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் ஐ.எஸ்.ஐ. லஸ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகளின் உயர் திறமையான பயங்கரவாதிகளை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக எச்சரிக்கை வந்தன.

அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் பயங்கரவாதிகளுக்கு சில தொழிலாளர்கள் உதவுவதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்த பிறகு அவர்களுக்கு இங்குள்ள நிலத்தடி தொழிலாளர்கள் உணவு தங்குமிடம் மற்றும் பணத்தையும் வெவ்வேறு இடங்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மாதம் பயங்கரவாதிகள் கதுவா, உதம்பூர், தோடா கிறிஸ்த்வார், ரியாசி ராஜோரி, பூஜ் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய உள் மாவட்டங்களுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக குறைவாக உயரங்கள் கொண்ட இடங்களை அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் 55 முதல் 60 பேர் கொண்ட உயர் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்

Tags:    

Similar News