பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை - விமான கட்டணங்கள் உயரும் அபாயம்
- இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
- 50-க்கும் மேற்பட்ட சர்வதேச வான்வழி தடத்தில் சேவைகளை நடத்தி வருகிறது.
காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதாக கூறி இந்திய விமானங்கள் தங்களது வான் பகுதியை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது.
வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைகளை பயன்படுத்தி செல்லும். சமீபத்தில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது கூட பாகிஸ்தான் வான்வழியாகத்தான் சென்றார்.
ஆனால் தற்போது பாகிஸ்தான் இதற்கு தடை விதித்து இருப்பதால் அந்த நாட்டின் வான் எல்லையை இந்திய விமானங்கள் தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் வான் எல்லைக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டு இந்திய விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளன.
நேற்று முதல் இந்திய விமானங்கள் இந்த புதிய முறையை கடைபிடிக்க தொடங்கி உள்ளன. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகள் விமானங்களில் கூடுதல் நேரம் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
குறிப்பாக ஒன்றரை மணி நேரம் முதல் சுமார் 2 மணி நேரம் வரை கூடுதலாக விமானங்களில் பயணிகள் இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
பயணிகள் சிரமம் தவிர விமான சேவையை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதல் எரிப்பொருள் பயன்படுத்த வேண்டியது இருப்பதால் அதிக இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்ப்பதற்காக இண்டிகோ விமான நிறுவனம் வருகிற 7-ந்தேதி வரை சில வெளிநாட்டு சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரபிக்கடல் வான் வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் முன் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விமான சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் வடமாநிலங்களில் இருந்து பாகிஸ்தான் வான் வழியாக 50-க்கும் மேற்பட்ட சர்வதேச வான்வழி தடத்தில் சேவைகளை நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தில்தான் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வருகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் தனது வான் வழியை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.
இதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், அகசாஏர் ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன. அந்த சமயத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.550 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருந்தது.
தற்போது பாகிஸ்தான் வான் எல்லையை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு கணிசமாக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.