ஒடிசா ரெயில் விபத்து - மத்திய ரெயில்வே மந்திரி நேரில் ஆய்வு - உயர்மட்ட குழு அமைப்பு!
- ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு.
- விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் கோரமான ரெயில் விபத்தாக இது மாறி இருக்கிறது.
மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மத்திய மந்திரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது..,
"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில், ரயில்வே, மத்திய, மாநில பேரிடர் படைகள் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ரெயில்கள் விபத்து தொடர்பாக விசாரணை செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும்."
"ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமுற்ற பயணிகளுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இறந்தவர்கள் விவரம் கண்டறியப்பட்டதும், அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.