துணை காவல் ஆய்வாளர்கள் தேர்வில் பல கோடி ஊழல்: விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றிய ஒடிசா அரசு
- ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் துணை ஆய்வாளர்கள் தேர்வில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகாரை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தன.
இந்நிலையில் காவல் துணை ஆய்வாளர் பணியமர்த்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் ஒடிசா காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இதுவரை 123 பேரை கைது செய்துள்ளனர். இதில் 114 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.
இந்த திடீர் சம்பவம் எதிர்பாராத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி ஒடிசா காவல் ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்க வழிவகுத்தது.
ஒடிசா காவல்துறையில் 933 காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.