இந்தியா

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Published On 2022-10-05 08:10 IST   |   Update On 2022-10-05 08:10:00 IST
  • இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது.
  • நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதுடெல்லி :

பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.

இதைப்போல தெலுங்கானாவின் முனுகோடு, உத்தரபிரதேசத்தின் கோலா கோரக்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

எனவே இந்த தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி, இந்த தொகுதிகளில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கான இறுதிநாள் வருகிற 14-ந்தேதி ஆகும்.

15-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 17-ந்தேதி ஆகும். இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

Tags:    

Similar News