இந்தியா

தவறாக ஏதும் செய்யவில்லை: பிரபுல் பட்டேல் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது சிபிஐ

Published On 2024-03-29 07:28 GMT   |   Update On 2024-03-29 07:28 GMT
  • 2017-ல் ஏர் இந்தியா குத்தகை தொடர்பாக முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
  • பிரபுல் பட்டேலுக்கு எதிராக குற்றச்சாட்டில் தவறு செய்ததற்கான ஆதாராங்கள் இல்லை.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தபோது, ஏர்இந்தியா விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் ஏர்இந்தியாவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. தனியார் நபர்கள் அதிக லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு பிரபுல் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதா? அல்லது விசாரணையை தொடர உத்தரவிடுமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியும்போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் பக்கம் சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் வசம் ஆனது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசில் பங்கேற்றுள்ளது.

மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. பா.ஜனதா பக்கம் வந்த உடன் சிபிஐ வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் வாஷிங் மெஷின் என்று அழைத்து வருகின்றன. கரைபடிந்தவர்கள் பா.ஜனதா பக்கம் சென்ற பிறகு தூய்மையடைந்து விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

Tags:    

Similar News