இந்தியா

துணை சபாநாயகர் இல்லாததை உணர்த்திய பாதுகாப்பு குளறுபாடு சம்பவம்

Published On 2023-12-14 02:27 GMT   |   Update On 2023-12-14 02:27 GMT
  • பாராளுமன்ற மக்களவையில் இருவர் நுழைந்து வண்ண புகை குண்டு வீசினர்.
  • உயர்மட்ட விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்து ஓடினர்.

தொடர்ந்து அவர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் அதே சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை பாதுகாக்க துணை சபாநாயகர் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ள நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுவாக மக்களவையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார்கள். துணை சபாநாயகர் பதவி கூட்டணி கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் பல ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமல் சபை செயல்பட்டு வருகிறது.

சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரத்தில், பா.ஜனதா எம்.பி.க்களும் ஒருவர் அவையை வழிநடத்துவார். துணை சபாநாயகர் இருந்தால், அவர்தான் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்த அம்சங்களை கவனிப்பார்.

2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு துணை சபாநாயகர் தலைமையில்தான் கூட்டு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகை

சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருக்கும்போது, சரண்ஜித் சிங் அத்வால் துணை சபாநாயகராக இருந்தார். அப்போது பல பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது இவ்வாறு நடத்தப்பட்டதற்கு அரசு மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

2007-ல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பாராளுமன்றம் மூடப்பட்டது.

தற்போது புது கட்டடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் என நினைத்திருக்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

விமான நிலையம் போன்று

இதனால் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உடல் முழுவதும் பரிசோதனை செய்யும் இயந்திரம் (body scanner machines) பாராளுமன்றத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News