பீகாரில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கி விட்டார்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
- பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
- முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கிவிட்டார். அரசு நிதிகள் இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார். பெண்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட மகிலா சம்வாத் என்ற முன்முயற்சி திட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டத்திற்காக அமைச்சரவை 225 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இந்த பொது நிதியை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது.
மாநில பெண்களுக்கு உறுதியான எதுவும் களத்தில் இல்லை. ஆனால் பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.
டிசம்பர் 2024-ல் இருந்து கட்டுமான செயல்பாட்டிற்காக 76,622 கோடி ரூபாப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், முதன்முறையாக அரசு இந்த பணிகளுக்காக சர்வதேச அளவிலான டெண்டர்களை கோரியுள்ளது. உலகளாவிய டெண்டருக்கான காணரம் என்ன?.
மேலும், தொடர்பு சாலைகள் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தயாராக உள்ளன, ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றை கையகப்படுத்தவில்லை. (புதிய) மருத்துவமனை கட்டிடங்களில் உபகரணங்கள் அல்லது மருத்துவர்கள் இல்லை. 'ஹர் கர் நல் கா ஜல்' திட்டத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.