இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கொள்கை- நிதின் கட்காரி தகவல்

Published On 2025-02-04 09:52 IST   |   Update On 2025-02-04 09:52:00 IST
  • செயற்கைக்கோள் கண்காணிப்புடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
  • நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.

புதுடெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமான சுங்க கட்டணம் வசூலிப்பதும், தரமற்ற சாலைகளும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும்.

முதலில், செயற்கைக்கோள் கண்காணிப்புடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். அத்திட்டப்படி, சுங்கச்சாவடிகளுக்கு வேலை இருக்காது.

சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டிகள் தெரிவிக்கும் புகார்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் மொத்த போக்குவரத்தில் தனியார் கார்களின் பங்கு 60 சதவீதம் ஆகும். ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் சுங்க வருவாய் 20 முதல் 26 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 2020-2021 நிதியாண்டில், நாள் ஒன்றுக்கு 37 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை அமைத்து நெடுஞ்சாலை அமைச்சகம் சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் அந்த சாதனை முறியடிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. வழக்கமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நெடுஞ்சாலைகள் போடப்படும் வேகம் அதிகமாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டில், 13 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். 'பாரத்மாலா' திட்டத்தின்கீழ், ரூ.1,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது.

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன், அப்பணிகளை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News