இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் சின்னம்: நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் பெருமிதம்

Published On 2023-05-29 03:31 GMT   |   Update On 2023-05-29 03:31 GMT
  • உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம்.
  • இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில்.

மும்பை :

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாராட்டி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

இந்தி நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நமது அரசியல் அமைப்பை நிலைநிறுத்தும், மகத்தான நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒருதாய் மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாப்பவர்களுக்கு என்ன ஒரு அற்புதமான வீடு!. மகிமையான இந்தியா என்ற பழைய கனவுடன் புதிய இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம். ஜெய் ஹிந்த். எனது பாராளுமன்றம், எனது பெருமை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் அதே பதிவில் ஆடியோ மூலம், "உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம். ஜனநாயகத்தின் ஆன்மா புதிய வீட்டில் வலுவாக இருக்கவும், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை பல யுகங்களுக்கு தொடர்ந்து வளர்க்கவும் எனது உருக்கமான பிரார்த்தனைகள்" என கூறியுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தின் புகழ்பெற்ற புதிய கட்டிடத்தை பார்த்து பெருமை அடைகிறேன். இது என்றும் இந்தியாவின் வளர்ச்சி கதையில் சின்னமாக இருக்க வேண்டும். டெல்லியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இருப்பதை கவனித்து இருக்கிறேன். இன்று இந்த புத்தம் புதிய பிரமாண்ட கட்டிடத்தை பார்க்கும் போது என் இருதயம் பெருமிதம் கொள்கிறது. இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இது புதிய இந்தியாவின் சின்னம். இந்தியா கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் மட்டும் முன்னோடியாக இல்லாமல், வளர்ச்சி மூலம் உலகத்திலும் முன்னோக்கி செல்கிறது. இந்த நாளை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியா வரும் ஆண்டுகளில் மேலும் வளர கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து பெருமிதமாக கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கான், அக்ஷய் குமார் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அவர் டுவிட்டரில் 2 பேரின் கருத்தையும் பாராட்டி பதில் அளித்து உள்ளார்.

Tags:    

Similar News