புதிய தொழிலாளர் சட்டங்கள்: பிரதமர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு- மன்சுக் மாண்டவியா
- 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன.
இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-
நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு.
புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.