இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நேபாள சிறை கைதிகள்- போலீசிடம் ஒப்படைப்பு
- நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
- தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை SSB பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.