முஸ்லிம்களை வெறுக்காதீர்கள்!.. பஹல்காமில் பலியானவரின் மனைவி மீது பரவும் அவதூறுகள் - NCW கண்டனம்
- ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.
- ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாட்டை கேலி செய்ய கூடாது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
"யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்" என்று ஹிமான்ஷி தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்லாதீர்கள் என்ற அவரின் கருத்து சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறி கும்பல்களால் ஹிமான்ஷி மீது சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நாட்டின் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலால் முழு நாடும் வேதனையும் கோபமும் அடைந்துள்ளது.
லெப்டினன்ட் வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி திருமதி ஹிமான்ஷி நர்வாலின் ஒரு அறிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் அவரை கேலி செய்வது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
எந்தவொரு உடன்பாடு அல்லது கருத்து வேறுபாடும் எப்போதும் கண்ணியத்துடனும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதி பூண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.