இந்தியா

திருப்பதி கோவிலில் நாளை நவராத்திரி பிரமோற்சவ கருட சேவை: தமிழகத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்

Published On 2023-10-18 10:21 IST   |   Update On 2023-10-18 10:21:00 IST
  • திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
  • கருட சேவையையொட்டி சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்திலும், இன்று காலை சர்வ பூபால வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை நடைபெறுகிறது. கருட சேவை தரிசனத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் இன்று காலை முதல் குவிய தொடங்கி உள்ளனர்.

இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை மறுநாள் காலை வரை மலைப்பாதையில் பைக்குகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இன்று இரவு முதலே கருட சேவையை காண பக்தர்கள் 4 மாட விடுதிகளில் குவிவார்கள் என்பதால் அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கருட சேவையையொட்டி சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பதியில் நேற்று 72, 123 பேர் தரிசனம் செய்தனர். 26,054 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News