"அது அரசு நிலம் என்று என் மகனுக்கு தெரியாது.." நில மோசடி வழக்கில் விடுபட்ட அஜித் பவார் மகனின் பெயர்
- ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த்து பவார்.
இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "இந்த ரூ.300 கோடி பரிவர்த்தனை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்த பரிவர்த்தனை தொடர்பான பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட கைமாறவில்லை. அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அதை விற்க முடியாது. அது அரசு நிலம் என்ற விஷயம் எனது மகன் பார்த்து மற்றும் அவரது கூட்டாளி திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்கு தெரியாது" என்று கூறினார்.
இதற்கிடையே இந்த நிலமோசடி தொடர்பாக போலீசார் பதிந்த வழக்கு வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. நிலத்தை வாங்கிய நிறுவனத்தில் 1 சதவீதம் மட்டும் பங்கு வைத்துள்ள திக்விஜய் பாட்டீலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,"நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.