இந்தியா

மகாராஷ்டிராவில் 50 சதவீத இடங்களை எம்விஏ கைப்பற்றும்- சரத் பவார்

Published On 2024-04-20 10:35 GMT   |   Update On 2024-04-20 10:35 GMT
  • மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் ‘அப்கி பார், 400 பார்’ முழக்கம் தவறானது.
  • முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம்.

48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள பரந்த புரிதல், நிலையான ஆட்சியை வழங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் 'அப்கி பார், 400 பார்' முழக்கம் தவறானது. சில இடங்கள் தொடர்பாக இந்திய கூட்டணியினுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதில் கவனம் செலுத்தக்கூடாது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம் என்றும் வாக்காளர்கள் காட்டாத உற்சாகம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

மேலும் கடந்த காலங்களில் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியதில்லை எனக்கூறிய சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைதுகளை மேற்கோள் காட்டி பா.ஜ.க.வை சாடினார்.

Tags:    

Similar News