இந்தியா

சர்ச்சை பேச்சு: பா.ஜ.க. மந்திரி மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. கோர்ட் உத்தரவு

Published On 2025-05-14 17:48 IST   |   Update On 2025-05-14 17:48:00 IST
  • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. மந்திரி பேசினார்.
  • கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி மன்னிப்பு கோரினார்.

போபால்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

Tags:    

Similar News