250 ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்களை முந்தியுள்ளோம்.. இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதாரம் - பிரதமர் மோடி
- அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
- மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன்.
அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். காரணம், 250 ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஐக்கிய இராஜ்ஜியத்தை இந்தியா முந்தியது" என்று தெரிவித்தார்.