இந்தியா

சிறுத்தைப்புலிகளிடம் இருந்து மனிதர்களை காக்க நவீன ஏற்பாடு- வனத்துறை நடவடிக்கை

Published On 2025-02-18 04:45 IST   |   Update On 2025-02-18 04:45:00 IST
  • வனப்பகுதியை சுற்றிலும் 233 கிராமங்கள் உள்ளன.
  • கடந்த ஆண்டில் மட்டும் 9 பேர் பலியாகினர்.

புனே:

புனே மாவட்டத்தின் ஜுன்னார் பகுதியில் மலைப்பாங்கான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றிலும் 233 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஜுன்னார் வனப் பிரிவில் ஒவ்வொரு 100 சதுர கி.மீட்டருக்குள் 44 சிறுத்தைப் புலிகள் உள்ளன என டேராடூன் இந்திய வனவிலங்கு சரணாலயம் தெரி்வித்து உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் சிறுத்தைப்புலி தாக்குதலால் இந்த பகுதிகளில் 17 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் மட்டும் 9 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு வனத்துறையிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் மனிதர்களை பாதுகாக்க நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சிறப்பு புலி பாதுகாப்பு படையை போலவே சிறப்பு சிறுத்தைப்புலி பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுத்தைப்புலிகளால் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சுமார் 150 வீடுகளில் சூரிய சக்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 650 வீடுகளுக்கு வேலிகள் அமைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது. இந்த வேலியை சிறுத்தைப்புலிகள் கடக்க முயன்றால், அது உயிருக்கு பயந்து திரும்ப ஓடி விடும்.

மேலும் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் சிறுத்தைகள் பதிவானால் இந்த அமைப்பு வன அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் அலாரத்தை எழுப்பும். இரவு நேரத்தில் சிறுத்தைப் புலி இருப்பதை கண்டறியக்கூடிய விலங்கு ஊடுருவல் கண்டறிதல் மற்றும் விரட்டும் அமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நவீன கழுத்து பட்டைகளை வினியோகித்துள்ளோம். பொதுவாக, சிறுத்தைப்புலிகள் ஒரு நபரின் கழுத்தை தாக்கும். அந்த சூழ்நிலையில் இந்த கழுத்து பட்டைகள் அவர்களின் உயிரை பாதுகாக்கும்.

கொரோனா காலத்தில் மனித செயல்பாடு குறைந்து சிறுத்தைகள் செழித்து வளர்ந்தன. மேலும் ஜுன்னாரில் சிறுத்தைப்புலி மீட்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் கிராமவாசிகளின் தாக்குதல்களில் காயமடைந்த அல்லது மோதல்களில் சிக்கிய சிறுத்தைப்புலிகளுக்கு பராமரிப்பை வழங்குகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News