இந்தியா

இரவில் தனியாக பேய் படம் கூட பார்த்து விடுவார்கள்... ஆனால்... மோடியை சாடிய மு.க. ஸ்டாலின்

Published On 2024-04-17 13:02 GMT   |   Update On 2024-04-17 13:02 GMT
  • ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
  • 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.

ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.

மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.

தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.

ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.

நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.

இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.

பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.

நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.

திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

Tags:    

Similar News