இந்தியா

காணாமல் போன ஜெகதீப் தன்கர்.. துணை ஜனாதிபதி பதவியேற்பில் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி!

Published On 2025-09-12 11:52 IST   |   Update On 2025-09-12 11:52:00 IST
  • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
  • ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபில் உள்ளிட்டோர், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின்னர் என்ன ஆனார்? எங்கு போனார்? என்பது மர்மமாக இருப்பதாக பேசியிருந்தனர். ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

இதற்கிடையே அண்மையில் ஜெகதீப் தன்கர் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து பண்ணை வீட்டுக்கு குடிபெயர்ந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அவர் உடல்நிலை காரணமாக எங்கும் செல்லாமல் பூரண ஓய்வில் இருந்ததாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பதவி விலகி 53 நாட்கள் கழித்து 15வது துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் அவர் இன்று கலந்து கொண்டுள்ளார். பொது வெளியில் தோன்றியதன் மூலம் அவரின் நிலை குறித்து எழுந்த ஊகங்களுக்கு ஜெகதீப் தன்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

Tags:    

Similar News