காணாமல் போன 4000 டன் நிலக்கரி.. மழையில் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் வினோத விளக்கம்!
- கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம்.
- நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்
மேகாலயாவில் சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்பட்ட 4,000 டன் நிலக்கரி மழையால் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சரின் கருத்து இப்போது மேகாலயாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது. அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கத்தை கண்டித்தது. நிலக்கரி காணாமல் போனதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அம்மாநில ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா, நாட்டில் அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்யும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம். கிழக்கு ஜெயின்டியா மலைகளிலிருந்து வெள்ள நீர் வங்கதேசத்திற்குள் பாய்கிறது. இந்தச் செயல்பாட்டில், நிலக்கரி சேமிக்கப்பட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.
நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.