இந்தியா

ஒவ்வொரு வங்கிக்கும் Minimum Balance தொகை ஏன் மாறுபடுகிறது? - RBI கவர்னர் விளக்கம்

Published On 2025-08-13 08:07 IST   |   Update On 2025-08-13 08:07:00 IST
  • சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்துள்ளது.
  • சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன.

இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 11 அன்று குஜராத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.

சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக எஸ்.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.

அதே சமயம் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.

அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News