இந்தியா

துப்பாக்கி சூட்டில் முடிந்த பேச்சுவார்த்தை - ஒருவர் உயிரிழப்பு!

Published On 2023-05-08 14:51 GMT   |   Update On 2023-05-08 14:51 GMT
  • ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது.
  • கூட்டத்தை பார்த்து பயந்த வருண், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

டெல்லியில் இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட சலசலப்பு துப்பாக்கி சூட்டில் முடிந்தது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கறிஞர் சுஷில் குப்தா தனது தரப்பை சேர்ந்த ஜஃப்ரூல் மற்றும் சையத் முக்கிம் ராசா என்பவரை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே முக்கிம் ரசா சுஷில் குப்தா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

முக்கிம் ரசாவுடன் அன்கித், முகிம், வருண் மற்றும் குலாம் முகமது உள்ளிட்டோரும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கிருந்த பொது மக்கள் அலுவலக வாசலில் திரண்டனர். கூட்டத்தை பார்த்து பயந்த வருண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

இதில் அங்கிருந்த அனாஸ் அகமது மீது தோட்டா பாய்ந்தது. காயமுற்ற அனாஸ் அகமதுவை அங்கிருந்தவர்கள் அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அனாஸ் அகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற குலாமை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கினர். இதோடு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரையும் பொது மக்கள் தாக்கினர். பொதுமக்களால் தாக்கப்பட்ட குலாமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் மூன்று பேரை தாக்கினர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அன்கித் மற்றும் முகிம் ஆகியோரை போலீசார் இரண்டு மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News