இந்தியா

காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யக்கூடாது - அகிலேஷ் யாதவ் அதிருப்தி

Published On 2023-10-22 07:25 GMT   |   Update On 2023-10-22 08:18 GMT
  • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
  • மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது.

லக்னோ:

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது. இங்கு பா.ஜ.க. ஆளும் கட்சியாக திகழ்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் சமாஜ்வாடிக்கு 6 தொகுதிகள் வழங்க முடிவு எட்டப்பட்டு இருந்த நிலையில், 229 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. இதனால் சமாஜ்வாடி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

சமாஜ்வாடி கட்சி சார்பிலும் 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடாது என்றும், சமாஜ் வாடியுடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உ.பி.யின் ஹர்டோய் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு பின் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புகிறதா, இல்லையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். எங்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம். உங்களுடன் கூட்டணி குறித்து மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க தனியாக போட்டியிடுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்.

கூட்டணி இல்லை என்றால் எங்களை அழைத்தது ஏன்? 2024 பாராளுமன்ற தேர்தலில் மட்டும்தான் கூட்டணி, மாநில அளவில் கூட்டணி கிடையாது என்பதை அவர்கள் தெளிவாக தெரிவித்து இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News