பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு: 8 பணியாளர்கள் சஸ்பெண்ட்
- மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் எம்.பி.க்கள் இடத்திற்குள் குதித்தனர்.
- மஞ்சள் நிற வண்ண புகை குண்டுகள் வீசிய அவர்களை எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மடக்கி பிடித்தனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
இதனால் மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மக்களவை கூடியது. அப்போது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையே 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.