பாதுகாப்பு குறைபாடு: அறிக்கை தாக்கல் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி- அவை ஒத்திவைப்பு
- பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசம் எழுப்பினர். மேலும், விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோசமிட்டனர்.
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விசயம் குறித்து நீங்கள் (சபாநாயகர்) அறிந்துள்ளீர்கள். பாராளுமன்ற பார்வையாளர்கள் அனுமதி சீட்டு வழங்கும்போது நாம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.