இந்தியா

கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளை அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்

Published On 2025-09-22 12:33 IST   |   Update On 2025-09-22 12:33:00 IST
  • ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
  • ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டிலிருந்து ரூ.1.5 லட்சமே கொடுத்துள்ளனர். இதனால் ரேஷ்மாவின் மாமியார் ஆத்திரத்தில் இருந்து வந்தார். ரேஷ்மாவை அவர் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.

இந்த நிலையில் பாம்பு ரேஷ்மாவை கடித்தது. வலியால் அலறிதுடிப்பதை அவரது மாமியார் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்துள்ளார். ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கை ரிஸ்வானாவை அழைத்து தனக்கு நடந்த கொடுமையை சொன்னார்.

உடனே வீட்டுக்கு வந்து அக்காவின் நிலைமையை பார்த்த ரிஸ்வானா பதறிப்போனார். கணவன் வீட்டாரிடம் சண்டைப் போட்ட ரிஸ்வானா, தனது அக்காவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அக்காவின் கணவன் வீட்டாரை தண்டிக்க எண்ணிய ரிஸ்வானா போலீசில் புகார் அளித்தார். கணவன் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News