இந்தியா

வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை- திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2022-12-06 11:38 GMT
  • லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றபின் காணவில்லை.
  • கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி கேரள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லிதுவேனிய பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் அவரது உடல் கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை வெளிநாட்டு பெண்ணின் சகோதரி அடையாளம் காட்டினார்.

பின்னர் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர்.இதில் அந்த பகுதியை சேர்ந்த உதயன் (வயது 27), உமேஷ் (31) ஆகியோரை பிடித்தனர்.

இவர்களில் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இன்னொருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இருவரும் வெளிநாட்டு பெண்ணை சம்பவ தினத்தன்று மாங்குரோவ் காட்டுக்கு கடத்தி சென்று போதை மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வலுகட்டாயமாக கற்பழித்து உள்ளனர். அப்போது நடந்த தகராறில் இருவரும் அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் கைதான உதயன், உமேஷ் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாக கூறி இருந்தது. அதன்படி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு கூறினார்.

மேலும் இருவரும் தலா ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அதனை பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையை கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி லிதுவேனியாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். இதற்காக லிதுவேனியா தூதரகம் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் நடக்கும் விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க அனுமதித்திருப்பது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது.

Tags:    

Similar News