இந்தியா

குற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்: கெஜ்ரிவாலை கிண்டல் செய்த கிரண் ரிஜிஜூ

Published On 2023-04-16 02:20 GMT   |   Update On 2023-04-16 02:20 GMT
  • கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.
  • சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள்.

புதுடெல்லி :

மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மன் பேரில் இன்று அவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.

இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.

மேலும் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார். அந்த பதிவில் அவர், பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று கூறி உள்ளார்.

இதற்கு பதிலடியாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, கெஜ்ரிவாலின் டுவிட்டர் பதிவை 'டேக்' செய்து, அவரைக் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.

அன்னா ஹசாரே அவர்களே மன்னிக்கவும். இவ்வளவு மிகப்பெரிய சுமையை (கெஜ்ரிவால்) நாட்டிடம் ஒப்படைத்திருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கோர்ட்டு உங்களை (கெஜ்ரிவால்) குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டின் மீதும் வழக்கு போடுவேன் என்று கூற நீங்கள் மறந்து விட்டீர்கள். சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள். நாம் சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News