இந்தியா

முகமது ஷபி - பகவல்சிங் - பத்மா

நரபலி கொடுத்த 2 பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா?

Published On 2022-10-17 11:31 IST   |   Update On 2022-10-17 13:12:00 IST
  • நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
  • பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களை போலீசார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர்.

மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சி ஒரு புறம் நடக்க நரபலி கொடுத்த பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி முகமது ஷபியிடம் கேட்டபோது, சில மாதங்கள் பிணவறையில் பணி புரிந்ததாகவும், அங்கு பிரேத பரிசோதனையின்போது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். இதனை போலீசார் முழுமையாக நம்பவில்லை.

எனவே இவர்களுக்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். சில இடங்களில் எலும்பு துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை யாருடையது என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன்முடிவுகள் வந்த பின்னரே பகவல் சிங் தம்பதி மற்றும் முகமது ஷபி ஆகியோர் வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளார்களா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News