இந்தியா

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Published On 2024-08-27 16:42 IST   |   Update On 2024-08-27 16:55:00 IST
  • டெல்லி சென்றுள்ள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
  • அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

புதுடெல்லி:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சிலர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே, பேரிடர் பாதிப்பு பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறது. நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த பகுதிகளில் பிந்தைய தேவை மதிப்பீடுகள் குறித்து விரிவான மற்றும் அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து வருகிறது.

இந்தக் குழு சேதத்தைக் கணக்கிடும்போது பழைய அளவுகோல்களை பயன்படுத்தாமல், உண்மையான இழப்பை மதிப்பிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்தக் குழுவிடம் கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

வயநாடு மறுவாழ்வுக்கு ரூ.2 ஆயிரம் கோடியும், இழப்பீடாக ரூ.1,200 கோடியும் கேட்டு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்றுள்ள கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

வயநாடு நிலச்சரிவை எல்-3 வகை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், அதிகபட்ச உதவி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News