இந்தியா

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிய தடை - அரியானா அரசு அதிரடி

Published On 2023-02-11 21:16 GMT   |   Update On 2023-02-11 21:16 GMT
  • அரியானா அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது.
  • அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும்.

வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.

ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட ஆஸ்பத்திரி அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரியானா மாநில அரசின் இந்த முடிவை பெரும்பாலான அரசு டாக்டர்களும், ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்

Tags:    

Similar News