இந்தியா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விலகல்

Published On 2022-07-09 02:21 GMT   |   Update On 2022-07-09 02:21 GMT
  • ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார்.

விஜயவாடா :

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.மாநாட்டில், அவருடைய தாயாரும், கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-

என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாகவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அதே சமயத்தில், என் மகள் சர்மிளா, தெலுங்கானாவில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். என் மகளை ஆதரிக்குமாறு என் மனசாட்சி சொல்கிறது. அவளுக்கு என் ஆதரவு தேவைப்படுவதால், அவளை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.

அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால், கட்சியில் இருந்தும், கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இந்த நிலைமையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மன்னியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது அறிவிப்பை கேட்டவுடன், தொண்டர்கள், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கூச்சலிட்டனர். இருப்பினும், ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய தாயார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News