இந்தியா

ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளிக்கு சுற்றுலா- இஸ்ரோ புதிய திட்டம்

Published On 2023-03-16 06:33 GMT   |   Update On 2023-03-16 10:38 GMT
  • ககன்யான் என்பது இந்தியாவில் மக்களுக்கான முதல் விண்வெளி பயண திட்டம் ஆகும்.
  • இஸ்ரோ 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

பெங்களூர்:

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற மேல்சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில், "இஸ்ரோ ஏற்கனவே இந்தியாவின் துணை சுற்றுப்பாதை விண்வெளி சுற்றுலாவுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.

ககன்யான் என்பது இந்தியாவில் மக்களுக்கான முதல் விண்வெளி பயண திட்டம் ஆகும். மக்களின் விண்வெளி பயணங்களுக்கு தேவையான பல்வேறு தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் இஸ்ரோ, 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-

இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும். விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும்.

இஸ்ரோ மூத்த அதிகாரிகள் அரசின் விண்வெளி சுற்றுலா முயற்சிக்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். உலக சந்தையில் விண்வெளி டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை போட்டி போட்டு இந்தியா நிர்ணயம் செய்யும். விண்வெளி சுற்றுலா பயணம் மேற் கொள்பவர்கள் தங்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "அரசின் விண்வெளி சுற்றுலா திட்டம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிடப்படும்" என்றனர்.

Tags:    

Similar News