இந்தியா

ஐ.பி.எல். சூதாட்டத்தால் ரூ. 1.5 கோடி இழந்த அரசு ஊழியர்.. விபரீத முடிவெடுத்த மனைவி

Published On 2024-03-26 11:05 GMT   |   Update On 2024-03-26 11:05 GMT
  • கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
  • தர்ஷன் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கர்நாடக அரசு ஊழியர் தர்ஷன் பாபு. நீர்வளத்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவை அடுத்த சித்ரதுர்கா என்ற பகுதியில் வசித்து வந்த தர்ஷனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ரஞ்சிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தர்ஷன் - ரஞ்சிதா தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு.

திருமணம் ஆன ஒருவருடத்தில் இருந்து தர்ஷன் பாபு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தர்ஷன் பாபு சூதாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக சூதாடியதில் தர்ஷன் அதிக பணத்தை இழந்துள்ளார்.

 


சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் போது, மீண்டும் கடன் பெற்று சூதாடுவதை தர்ஷன் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கடனாக பெற்று இருக்கிறார். கடனாக பெற்ற தொகையை சூதாட்டத்தில் இழந்த தர்ஷன், இழந்த தொகையில் ரூ. 1 கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.

எனினும், கடனில் ரூ. 84 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். கணவர் தர்ஷன் பெற்ற கடன் தொகையை திரும்ப கேட்டு, மனைவி ரஞ்சிதாவிடம் கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடன்தாரர்கள் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த மனைவி ரஞ்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணத்தை ரஞ்சிதா கடிதம் ஒன்றில் எழுதி வைத்திருக்கிறார். அதில் கடன்தாரர்கள் என்ன தொல்லை கொடுத்தனர் என்று விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

கணவனின் சூதாட்ட பழக்கம், கழுத்தை நெறித்த கடன், கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News