சிந்து நதிநீர் எங்கும் செல்லாது.. ஒப்பந்தம் ரத்து பற்றி பாகிஸ்தானின் கடிதங்களை நிராகரித்த மத்திய அரசு
- நீர் மறுக்கப்பட்டால் போர் தொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
- இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அனுப்பிய கடிதங்கள் வெறும் சம்பிரதாயங்கள் மட்டுமே என்றும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறியுள்ளார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒப்பந்தத்தை நிறுத்தியது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ, நீர் மறுக்கப்பட்டால் போர் தொடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் நீரை திறக்கக்கோரி பல முறை பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இவை குறித்து பேசிய சி.ஆர்.பாட்டீல், "சிந்து நதி நீர் எங்கும் செல்லப்போவதில்லை" என்று பாட்டீல் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார்.
பிலாவல் புட்டோ, ஒப்பந்தம் குறித்து போர் மிரட்டல் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற பாட்டீல், "இரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயும் என்று அவர் பேசினார், ஆனால் இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.