இந்தியா

குருணை அரிசி

குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி - மத்திய அரசு

Published On 2022-09-22 00:51 GMT   |   Update On 2022-09-22 00:51 GMT
  • அரிசி ஏற்றுமதியில் உலகளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
  • உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

புதுடெல்லி:

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது.இதன் காரணமாகவே உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோழி வளர்ப்புத் துறையில் குருணை அரிசி தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்புத் துறைக்கான உள்ளீடு செலவில் குருணை அரிசி தீவனத்தின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும். எனவே விலை உயர்வால் பாதிப்புக்கு தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது.

காரிப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு முந்தைய பருவத்தை விட 5 முதல் 6 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் காரிப் பருவத்தில் அரிசி உற்பத்தியில் 10 முதல் 12 மில்லியன் டன்கள் குறையும் வாய்ப்புள்ளது. எனவே குருணை அரிசி ஏற்றுமதி மீதான தடை முக்கியத்துவம் பெறுகிறது. இது பயிர் வாய்ப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் விலைகள் இரண்டிலும் தாக்கத்தை எற்படுத்தும். சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News