"இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்" - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
- தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
- பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகாரக் கைப்பற்றலில் இருந்து சொந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான கதைகளை உருவாக்க முனைகிறது. இது பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்பட்ட தந்திரமாகும்.
சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது. பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்" என்று தெரிவித்துள்ளார்.