மியான்மர் நிலநடுக்கம்: 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அனுப்பிய இந்தியா
- மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,455 ஆக அதிகரித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன.
புதுடெல்லி:
மியான்மர் நாட்டில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,455 ஆக அதிகரித்துள்ளது. 4,840 பேர் காயம் அடைந்துள்ளனர். 214 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. 'ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் இந்தியா உதவி செய்து வருகிறதுது. தற்காலிக கூடார துணிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், பிரட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், சோலார் விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஜெனரேட்டர் செட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். காரியல் கப்பல் திலவா துறைமுகத்திற்கு சென்றடைந்தது. அதன்பின், மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.