பருத்திக்கான இறக்குமதி வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
- இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும்.
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அத்துறை கடுமையாக பாதிக்கும்.
இந்த நிலையில் பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ஜவுளித்துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, கடந்த 19-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பருத்திக்கான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது.
ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் வகையில், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. மேலும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 18-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும். உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பதை அதிகரித்து பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும். இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.