வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும் - ராகுல் காந்தி அதிரடி
- டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
- மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன, மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட 5 வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?, வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?, எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?, பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? உள்ளிட்ட 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.
அவரிடம் தரவுகளையும், எழுத்துபூர்பமான பிரகடனத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
இதற்கிடையே இன்று பெங்களூருவில் நடைப்பெற்ற தேர்தல் முறைகேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. இது ஒரு ஆச்சரியமான முடிவு. நாங்கள் தரவுகளை ஆய்வுசெய்தபோது, 1 கோடி புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததை அறிந்தோம்.
மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தப் புதிய வாக்காளர்கள் எங்கெல்லாம் வாக்களித்தார்களோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றது" என்று தெரிவித்தார்.