சத்தீஸ்கரில் திருட்டு சந்தேகத்தில் 10-வது மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
- கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சுலேசா கிராமத்தை சேர்ந்தவர் துலாராம் (வயது 38). இவரது மனைவி பசந்திபாய்.
துலாராம் ஏற்கனவே 9 பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் துலாராமின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவர்கள் அனைவரும் துலாராமை பிரிந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் தான் அவர் 10-வதாக பசந்திபாயை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் மனைவி மீது துலாராம் சந்தேகப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னை பிரிந்து சென்று விடுவார் எனவும் துலாராம் கருதியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துலாராம் தனது 10-வது மனைவி பசந்திபாயுடன் ஒரு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண வீட்டில் இருந்து பசந்திபாய் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், புடவைகளையும் திருடியதாக துலாராம் சந்தேகப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துலாராம் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது முகத்தை சிதைத்து அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்றுள்ளார்.
இதற்கிடையே காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் பசந்திபாய் என்பதும், அவரது கணவர் துலாராம் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து துலாராமை போலீசார் கைது செய்தனர்.