இந்தியா

'இந்தி' படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பளிச்!

Published On 2025-02-23 14:13 IST   |   Update On 2025-02-23 14:14:00 IST
  • சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
  • இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள்

இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார்,

"தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.

நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே  அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும்.

நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.

ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர்  கோல்வால்கர் கூறியுள்ளார்.

இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News