இந்தியா

நீதிபதிகளை 'நாய் மாஃபியா' என விமர்சித்த பெண்மணிக்கு சிறை - உயர்நீதிமன்றம் பாடம்

Published On 2025-04-24 08:59 IST   |   Update On 2025-04-24 09:07:00 IST
  • குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
  • ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஒருவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒரு வார சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் மும்பை உயர் நீதிமன்றத்த்தில் லீலா மனுதாக்கல் செய்தார்.

கடந்த ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News