22-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை: பெங்களூருவை புரட்டி போட்ட கனமழை
- மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் அகற்றப்பட்டது. மேலும் மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் போல் காட்சி அளித்தது. மேலும் சில சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தன. வாகன ஓட்டிகளும் கீழே விழுந்த சம்பவங்கள் நடந்தது. நேற்று விடுமுறையை கொண்டாடிவிட்டு வீடுகளுக்கு திரும்பியவர்கள் மழையில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையின் காரணமாக எம்.ஜி.சாலை, விதான் சவுதா, சாந்தி நகர், கே.ஆர்.பகுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகளும் ஒடிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் மின் தடையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு வருகின்ற 22-ந் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதேபோல் தார்வாட், உத்தர கன்னடம், பெல்லாரி, விஜயபுரா மற்றும் பெலகாவி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.