அரியானாவில் சாதி பாகுபாட்டால் தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை - டிஜிபி மீது குற்றச்சாட்டு
- தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
- ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.