சாதாரண மக்களுக்கு கனவாகும் தங்கம்: 2026-ல் ரூ.1.25 லட்சம் வரை போகலாம்
- பண்டிகைக் காலங்கள், திருமணத் தேவைகளால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் விலை உயர்வுக்கு காரணம்.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டை பொறுத்தே இந்திய சந்தையும் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய தங்கத்தின் விலை வரும் மாதங்களில் தொடர்ந்து உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பொருளாதார ஆய்வுக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ₹99,500 முதல் ₹1,10,000 வரையிலும், 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் ₹1,10,000 முதல் ₹1,25,000 வரையிலும் உயரக்கூடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
டிரம்ப் செய்யும் செயல்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது, பெடரல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களும் தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமணத் தேவைகள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
2025-ன் மூன்றாம் காலாண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,500 டாலர் என்ற ரேஞ்சில் இருந்தது. அடுத்த நான்காம் காலாண்டில் 3,700 டாலராக உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம் மேலும் விலை உயரவே வாய்ப்புகள் அதிகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.