இந்தியா

பொது இடத்தில் அனுமதியின்றி வீடியோ எடுக்க முயற்சி: ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது

Published On 2025-07-31 15:06 IST   |   Update On 2025-07-31 15:07:00 IST
  • பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.
  • யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெங்களூரு:

ஜெர்மனியை சேர்ந்தவர் யூனஸ் ஸாரோ. இன்ஸ்டாகிராமில் ஏராளமான சாகச வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் 20 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் பெங்களூரு சர்ச் தெருவில் போக்குவரத்து மற்றும் மக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் நேற்று மாலை ஒரு சாகச வீடியோ எடுக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.

இதுபற்றி தெரிய வந்ததும் கப்பன்பார்க் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் யூனஸ் ஸாரோவை அனுமதியின்றி படம் எடுக்க கூடாது என்றும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் கூட்டத்தை கூட்டுவது சட்டப்படி தவறு என்றும் தெரிவித்தனர். இதையடுத்து யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் யூனஸ் ஸாரோவை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் கலைந்து சென்றதும் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் பலியானதை அடுத்து அனுமதியின்றி கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 112 என்ற போலீசாரின் அவசர அழைப்புக்கு வந்த தகவலின் அடிப்படையில் இங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்றனர்.

Tags:    

Similar News