பெகாசஸ் முதல் SIR வரை.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
- பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார்.
- பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது.
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த சூர்யகாந்த், ஒரு சிறிய நகரத்தில் ஒரு வழக்கறிஞராக தொடங்கி நாட்டின் நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை எட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் ஒரு பகுதியாக சூர்யகாந்த் இருந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில், பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார். காலனிய கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட பெருமையும் நீதிபதி சூர்யகாந்துக்கு உண்டு.
1967 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தீர்ப்பை ரத்து செய்த ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் ஒரு பகுதியாக இருந்தார். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தது.
நாட்டின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உளவு பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதி சூர்யகாந்தும் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் சட்டவிரோத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சைபர் நிபுணர்கள் குழுவை அமைத்தார்.
அந்த வழக்கில், "பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது" என்று அவர் அங்கம் வகித்த அமர்வு தெரிவித்த கூற்று பிரபலமானது.
2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த அமர்வில் காந்த் இருந்தார் .
2020 ஆம் ஆண்டில், அவரது அமர்வு காலவரையற்ற இணைய இடைநிறுத்தம் அனுமதிக்கப்படாது என்றும் இணைய அணுகல் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும் தீர்ப்பளித்தது.
2023 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பில் வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார்.
டிசம்பர் 2023 இல், 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியதை உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் காந்த் ஒரு பகுதியாக இருந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தார்.
2024 நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் முழு தேர்வையும் ரத்து செய்ய மறுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.
கடைசியாக பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுமாறு நீதிபதி சூர்யகாந்த் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன் நவம்பர் 22 நிகழ்வில் பேசிய சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 90,000 வழக்குகளை குறைப்பதே தலைமை நீதிபதியாக இருக்கும் காலத்தில் தனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.